உலக சுகாதார அமைப்பின் நோய்த்தணிப்பு மருத்துவம் தொடர்பான வருடாந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் மதுரகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெறும் இந்தக்கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து ஒரே நபராகப் வைத்தியர் மதுரகன் கலந்து கொண்டுள்ளார்.
31 நாடுகளைச் சேர்ந்த 66 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய மருத்துவத் தொழில்நுட்பங்கள் இன்னும் நம்மிடம் இல்லை.
பல நோய்களைக் குணப்படுத்த முடிந்தாலும், குணப்படுத்த முடியாத மற்றும் இறுதிக்கட்ட நோய்களுடன் வாழும் ஏராளமான நோயாளிகள் உடல் வலி, மனவேதனை மற்றும் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர்.
ஆனால், இந்தத் துன்பங்களில் பலவற்றைத் தடுக்கவும், குறைக்கவும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. இதுவே நோய்த்தணிப்பு மருத்துவத்தின் அடிப்படை நோக்கமாகும்.
குணப்படுத்த முடியாத நோய்களுடன் வாழும் நோயாளிகளின் வலியையும் துன்பத்தையும் குறைத்து, அவர்களின் வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை கண்ணியத்துடனும், ஆறுதலுடனும், அர்த்தமுள்ளதாகவும் வாழ உதவுவதே நோய்த்தணிப்பு மருத்துவத்தின் முக்கிய இலக்காகும்.
“உயிர்வாழும் ஆண்டுகளை அதிகரிப்பது மட்டுமல்ல; எஞ்சியிருக்கும் ஆண்டுகளின் உயிர்ப்பை அதிகரிப்பதே நோய்த்தணிப்பு மருத்துவத்தின் நோக்கம்.”
இந்த நோக்கத்தையும் இலக்கையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்திலும் நோய்த்தணிப்பு மருத்துவத்திற்கான கொள்கை உருவாக்கம், வலியுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், நிதி ஒதுக்கீடு மற்றும் நிதியளிப்பு முறைகள், அனைவருக்கும் சமமான சுகாதாரப் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான நோய்த்தணிப்பு மருத்துவச் சேவைகள், இது தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஒன்றோடொன்று தொடர்புடைய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்தச் சேவைகளை வலுப்படுத்தி, தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் அவற்றைச் சமமாகவும் உரிய நேரத்திலும் கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகளும் இதன்போது ஆராயப்பட்டன.