ஸ்வீடன் தத்துவ ஞானியும், ஆக்ஸ்போர்டின் முன்னாள் பேராசிரியருமான நிக் போஸ்ட்ரோம், மனிதர்கள் 1,400 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போஸ்ட்ரோம், அவர் வெளியிட்ட ‘சூப்பர் இன்டெலிஜென்ஸிற்கான உகந்த நேரம்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் உள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “நாம் வயதாகாமல் இருந்திருந்தால் நமது ஆயுட்காலம் சுமார் 1,200, ஒருவேளை 1,400 ஆண்டுகளாக இருக்கலாம்” என தெரிவித்தார். அதேநேரம் இது மனிதர்களுக்கு அழிவே இல்லாத சாகாவரம் பற்றிய கணிப்பு அல்ல என்றும், கணித ரீதியான சாத்தியக்கூறு மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
போஸ்ட்ரோம் கூறும் 1,400 ஆண்டுகள் என்பது, இதுவரை சரிபார்க்கப்பட்ட மிக வயதான மனிதரின் வயதை விட 11 மடங்குக்கும் அதிகமாகும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக வயதான, சரிபார்க்கப்பட்ட மனிதரான பிரெஞ்சுப் பெண்மணி ஜீன் கால்மென்ட், 122 ஆண்டுகள் 164 நாட்கள் வாழ்ந்து 1997-ல் காலமானார்.
விஞ்ஞானிகளால் முதுமை எனும் உயிரியல் செயல்முறையை முற்றிலுமாக நீக்க முடிந்தால், வயதாவதோடு தொடர்புடைய கடுமையாக அதிகரிக்கும் மரண அபாயத்தை மக்கள் இனி எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்பதே போஸ்ட்ரோம் முன்வைக்கும் கருத்தின் கணித ரீதியான அடிப்படையாகும்.
1,400 ஆண்டு எப்படி சாத்தியம்
அதாவது, மனித உடலில் ஏற்படும் செல்களின் சிதைவைச் சரிசெய்து, வயோதிகத்தை முற்றிலுமாகத் தடுக்கும் மருத்துவ சிகிச்சைகளை எதிர்கால ஏஐ தொழில்நுட்பம் கண்டறியும் என்று போஸ்ட்ரோம் நம்புகிறார். ஆரோக்கியமான 20 வயது இளைஞருக்கு வயோதிகம் அல்லாத பிற காரணங்களால் (விபத்துகள், தொற்றுநோய்கள் போன்றவை) ஏற்படும் ஆண்டு இறப்பு விகிதம் சுமார் 0.07 சதவீதமாக உள்ளது. வயோதிகம் தடுக்கப்பட்டு, இந்த விகிதம் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருந்தால், ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 1,429 ஆண்டுகளாக இருக்கும் (1 ÷ 0.0007) என அவர் நம்புகிறார்.
எந்த ஆதாரமும் இல்லை
மனித முதுமையைத் தடுக்கக்கூடிய நிறுவப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. மேலும், அவர் கற்பனை செய்யும் உயிர்மருத்துவ மாற்றத்தை தற்போதைய ஏஐ அமைப்புகளால் வழங்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.