முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் பற்றி பரிசீலிப்போம் என ரஷ்ய பாதுகாப்புத் துறை துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், விளாடிமிர் புதினின் கீழ் பிரதமராகவும் பணியாற்றி உள்ளார். இப்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ள மெட்வதேவ், ‘மாஸ்கோ ஜர்னல் ஆஃப் இன்டர்நேஷனல் லா’ இதழில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
‘நாட்டின் இறையாண்மை மற்றும் அணு ஆயுதங்கள்: தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சர்வதேச சட்ட அம்சங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அதில் கூறியிருப்பதாவது: உக்ரைனும் நேட்டோ தோழமை நாடுகளும் சில எல்லைகளை ஏற்கெனவே தாண்டிவிட்டன. பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதமல்லாத வழிகளை பெருமளவில் பயன்படுத்துகின்றன. இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை அடிப்படையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்கும் நிலைக்கு ரஷ்யாவை தள்ளக்கூடும்.
மேலும் மேற்கத்திய நாடுகள் கிவுக்கு (உக்ரைன்) மறைமுகமாக அணு ஆயுதங்களை விநியோகித்தால் நாங்களும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலிப்போம். ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை மட்டுமல்ல, அதற்கான கடமையும் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா அணு ஆயுதத்துடன் கூடிய செயற்கைக்கோள் ஒன்றை ஏவத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மெட்வதேவ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். `ஸ்புட்னிக்-எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அணு ஆயுத செயற்கைக்கோள் பிற செயற்கைக்கோள்களை முடக்க அல்லது அழிக்கப் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளது.