ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை வேண்டுமென்றே திரிபுபடுத்தியுள்ளதுடன், தவறான தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறது என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ஷ குமார குற்றஞ்சாட்டினார்

கொழும்பில் வியாழக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 550 ஆவது விதிக்கமைய, கடுமையான தண்டனைக்குள்ளான சிறைக் கைதிகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, அவர்கள் சிறைச்சாலையினால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையையே அணிய வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவானது இச்சட்டத்தின் உண்மையான உள்ளடக்கத்தை முழுமையாகத் திரிபுபடுத்தி, தவறான தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறது.

இதன் தொடர்ச்சியாக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசியல் போக்கானது, தற்போது 'ராஜபக்ஷ நிக்காய' என்ற அரசியல் அடையாளத்துக்குள் முழுமையாகச் சிக்கி, தீவிரவாத மற்றும் இனவாதப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

வரலாற்றில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு கட்சியாகத் திகழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, இன்று அதன் கொள்கைகளில் இருந்து விலகி, தவறான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கவலைக்குரியது.

இறுதியாக, சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 550 ஆவது விதியை வேண்டுமென்றே திரிபுபடுத்தி, சட்ட விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியமைக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் உள்ளிட்ட தலைமைத்துவமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

மேலும், நாட்டின் ஒரு முக்கியமான அரசியல் கட்சி இத்தகைய பொறுப்பற்ற முறையில் செயற்படுவதை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.