யாழ்ப்பாணம், நெடுந்தீவு கல்வி வலயப் பாடசாலைகளை பார்வையிட சென்றமை தொடர்பில் ஆசிரியர் சங்க உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் கடிதங்கள் அனுப்பப்படுவது தொடர்ந்தால், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அண்மையில் நெடுந்தீவுக்குச் சென்று, அங்கு கடமைப் புரியும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது தூரபிரதேசம் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆபத்துக்கான கூடுதல் சம்பளம் இடைநிறுத்தப்பட்டமை உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகள் தவறியிருந்தமை கண்டறியப்பட்டது.
இதற்கமைய ஆசிரியர் சங்கம் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்திய பின்னரே, கடல் போக்குவரத்தில் நிலவும் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு சில ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஆபத்துகான கூடுதல் சம்பளம் வழங்க கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் கடந்த செப்டெம்பர் 9ஆம் திகதி, இலக்கம் NP/20/Edu.Adm/Inq/2026 எனும் குறிப்பிலான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அது சங்க உறுப்பினர்களை அச்சுறுத்தும் விதத்தில் காணப்பட்டமை அதிருப்தியளிக்கின்றது.
வடக்கு மாகாணக் கல்வி அதிகாரிகளின் இத்தகைய செயற்பாடுகள் தொழிற்சங்கக் கட்டளைச் சட்டத்தின் 26 மற்றும் 27ஆம் பிரிவுகள் உள்ளிட்ட சட்ட விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.
இந்நிலையில், நெடுந்தீவுப் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் தொடர்பாடல்கள் அச்சுறுத்தலான, ஜனநாயக விரோதமான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஆகும். தொழிற்சங்கத்தின் சட்டபூர்வமான செயற்பாடுகளில் தொடர்ந்து தலையிடப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையேற்படும்.
மேலும், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையிலும், சீரற்ற கடல் போக்குவரத்தால் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமங்கள் நிலவுகின்ற நிலையிலும், ஏன் பாடசாலை உணவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்ற கேள்வியையும் முன்வைக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.