நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புகளின் போது, மொத்தமாக 672 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிஹிணியாவ பிரதேசத்தில், வெலிப்பன்ன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து முறையே 252 கிராம் 150 மில்லிகிராம் மற்றும் 150 கிராம் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 32 வயதுடைய மீகஹதென்ன மற்றும் லிஹிணியாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

இதேவேளை, பதவிய பொலிஸ் பிரிவின் யாய (ஏ) பிரதேசத்தில், புல்மோட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற மற்றுமொரு சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 269 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் 22 வயதுடைய பதவி ஸ்ரீபுர பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முறையே மீகஹதென்ன மற்றும் பதவிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தந்தப் பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.