நாடு முழுவதிலும் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற மக்கள், வரவு - செலவுத் திட்டத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவு முரண்பாடுகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள பொல்துவ சந்திப் பகுதியில் இன்று (20) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'நான்கு திசைகளிலிருந்தும் கொழும்புக்கு வந்துள்ளோம். ஆட்சியாளர்கள் சுகபோகமான இருக்கைகளில் இருக்கின்றனர். நாங்கள் வீதியில் வெயிலில் காய்கின்றோம். எமது உரிமைகளை வழங்கவேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட மாற்றத்தை விளக்கவேண்டும். எமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்ற முடியாது' என பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பாதுகாப்பு கருதி பொலிஸார் வரவழைக்கப்பட்டதோடு, இந்தப் போராட்டம் காரணமாக குறித்த பகுதி வீதியில் வாகனப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
2020 - 2024 ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலைவர் மாலிக விமலசூரிய மேலும் தெரிவிக்கையில்,
2020 - 2024 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற சுமார் 154,000 அரச ஊழியர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவு முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்றவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தெளிவான ஓய்வூதியக் கொள்கை அவசியம். ஓய்வூதியக் கொள்கை ஒன்று தேவை என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.
பெலவத்தையில் இருந்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்றால், அந்தத் தீர்மானங்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கும் பதிலளிக்கவேண்டும்.
2020ஆம் ஆண்டில் எம்முடன் இணைந்து பணியாற்றி, ஒரே மாதிரியான சலுகைகளைப் பெற்றவர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு 17 முதல் 80 சதவீதம் வரையான ஓய்வூதிய அதிகரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சில தரப்பினருக்கு 100 முதல் 120 சதவீதம் வரையான அதிகரிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அதிகரிப்புகளை வழங்கியமை தொடர்பில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், 2020 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற எமக்கும் நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
அரசாங்கத்துக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் அல்லது நிதி நெருக்கடிகள் இருக்குமானால், அவற்றைக் கருத்திற்கொண்டு கலந்துரையாடுவதற்கும் தீர்வொன்றை எட்டுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களின் எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் அனுதாபத்துடன் பரிசீலித்து, எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
ஆனால், இந்த அரசாங்கம் மக்கள் அமைப்புகளுடனும் மக்கள் சக்திகளுடனும் கலந்துரையாடுவதில்லை. பெலவத்தையிலிருந்து வரும் உத்தரவுகளுக்கு மாத்திரமே செயற்படுகிறது. மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசாங்கமே எமக்குத் தேவை என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பாக, 2020 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற 154,000க்கும் அதிகமானோர் அநீதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓய்வூதிய முரண்பாட்டைத் திருத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பில் பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இங்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்திடம் பிரச்சினையை எடுத்துரைப்பது செவிடர்களிடம் வீணை வாசிப்பதைப் போன்றதாக இருக்கின்றது.
பலர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஓய்வுபெற்றவர்களை நினைவுகூருகின்றனர். அவர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகள் குறித்துப் பேசுகின்றனர். ஆனால், ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின்னர் அவற்றை மறந்துவிடுகின்றனர். இவ்வாறான இரட்டை நிலைப்பாட்டை நாம் பின்பற்றமாட்டோம்.
தற்போது எமக்கு ஆட்சியதிகாரம் இல்லை. எனினும், ஓய்வுபெற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓய்வூதிய முரண்பாட்டை நீக்குவதற்கும் எதிர்க்கட்சியாக எம்மால் இயன்ற அதிகபட்ச அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்குவோம்.
ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்ட சலுகையை அந்தத் தரப்பினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கவேண்டும். 154,000 ஓய்வுபெற்றவர்களையும் பிரித்துப் பார்க்காமல், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய முரண்பாட்டுத் தொகையை உடனடியாக வழங்குவது முக்கியமானதாகும்.
நாட்டில் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறப்படலாம். ஆனால், அரசாங்கத்திடம் போதுமான நிதி இருப்பதாக அமைச்சர்களே தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க பெருமளவு நிதி சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவ்வாறான நிலையில், 2020 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற எமது தாய்மார்கள், தந்தையர்களுக்கு ஏன் பாரபட்சம் காட்டப்படவேண்டும்?
ஓய்வுபெற்றவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதற்காக எமது கட்சியின் ஜே.சி. அலவத்துவல உள்ளிட்டோரையும் தொடர்புபடுத்தியுள்ளோம். இந்த அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கத் தவறினால், எமது அரசாங்கத்தின் கீழ் இந்த ஓய்வூதிய முரண்பாட்டை நிச்சயமாக நீக்குவோம் என்றார்.