மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வேலணை அல்லைப்பிட்டியில் ஐந்து ஏக்கர் காணி ஒதுக்கீடுதி செய்யப்பட்டு அலுவலக கட்டடம் சாரதி பயிற்சி வசதிகள் போன்றவற்றை அமைப்பதற்கு திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச சேவைகளை மக்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது, அந்த வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய மோட்டார் வாகனங்களுக்கான பதிவுச் சேவைகளையும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துடன் தாம் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, மோட்டார் வாகனங்களின் உரிமை மாற்றச் சேவைகள், சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பரீட்சைகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் ஒருநாள் சேவை மற்றும் வழமையான சேவை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும், இவற்றின் தொடர்ச்சியாகவே புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுச் சேவைகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதால், பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியதாரர்கள் தமது விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்காக அநுராதபுரம் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் . இதற்கமைய, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்கள் தமது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்திலேயே விரலடையாளங்களைப் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தற்போது போதிய இடவசதியின்றிச் செயற்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டு, வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின் அல்லைப்பிட்டிப் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் காணி திணைக்களத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த காணியில் அலுவலகக் கட்டடம் மற்றும் சாரதி பயிற்சிக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டமிடல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது பொதுமக்கள் மேலும் இலகுவாகவும் சிரமமின்றியும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் அரச சேவைகள் மக்களைச் சென்றடைவதுடன், அவை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.