2028ஆம் ஆண்டு முதல் புதிய அடிப்படைச் சம்பளக் கட்டமைப்பின் அடிப்படையில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் படிப்படியாகச் சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதுவரையில் தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 2027ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் மாதாந்தம் 2,500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அடிப்படைச் சம்பளக் கட்டமைப்பின் அடிப்படையில் ஓய்வூதியத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் இந்த இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படும்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை 2020ஆம் ஆண்டின் அடிப்படைச் சம்பள அளவுத்திட்டத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள இறுதிக்கட்டத் திருத்தம் 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அடிப்படைச் சம்பளத் திருத்தம் காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்கும் அதற்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கும் இடையில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளைக் குறைத்து, வௌ;வேறு காலப்பகுதிகளில் ஓய்வுபெற்றவர்களுக்கும் நியாயமான முறையில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதற்கமைய, 2025ஆம் ஆண்டின் புதிய அடிப்படைச் சம்பளக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஓய்வூதியத் திருத்தங்கள் 2028ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு, கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
திருத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படத் தொடங்கியதும், 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு நிறுத்தப்படும்.
மேலும், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் 02ஃ2025, 03ஃ2025, 04ஃ2025 மற்றும் 05ஃ2025 ஆகிய சுற்றறிக்கைகளின் கீழ் சம்பளம் தீர்மானிக்கப்பட்ட அரச துறை ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த ஏற்பாடுகள் பொருந்தும்.
ஓய்வூதியதாரர்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் கொடுப்பனவு வேறுபாடுகளைக் குறைத்து, புதிய அடிப்படைச் சம்பளக் கட்டமைப்புக்கு அமைவான சீரான ஓய்வூதிய முறையை உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இடையிலான ஓய்வூதிய முரண்பாடுகளைப் படிப்படியாகத் தீர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.