அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதியை ஒதுக்கிய போதிலும், நிர்வாகத் தடைகள் மற்றும் அதிகாரிகளின் பயம் காரணமாக அந்த நிதியை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியவில்லை என பேராசியரியர் ஜி.எல். பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்ட நடவடிக்கைகள் மற்றும் புதிய சட்டங்கள் காரணமாக நல்லெண்ணத்துடன் முடிவெடுக்கும் அதிகாரிகளும் தண்டனை பெறும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதால், பொறுப்பேற்கத் தயங்கி வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியுள்ளன. தித்வா பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாவில் வெறும் 8 சதவீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பணவீக்கம் 8.3 சதவீதமாகவும், டொலரின் பெறுமதி 337 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது. மத்திய கிழக்குப் போருக்கு முன்பே டொலர் விலை உயர்ந்துவிட்டது. அந்த வகையில் அரசாங்கத்தின் வாதம் அடிப்படையற்றது.

பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக சுருங்கியுள்ளதுடன், அதானி நிறுவனம் மற்றும் நெக்சஸ் ஆடை நிறுவனம் போன்ற முக்கிய முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

நாட்டில் 30 சதவீதமானோர் வறுமையில் வாடுவதுடன், 6 மில்லியன் மக்களால் போசாக்கான உணவைக்கூட உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்துத் துறை தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றார்.