தேசிய அபிவிருத்தி  வங்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு மற்றும் இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் அறிக்கை ஆகியன 2026 ஒக்டோபர் 15 ஆம் திகதி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த வங்கி தொடர்பில் இலாபப் பங்கீடு,கிளைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பணிப்பாளர் சபை கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம், பணவீக்க இலக்கீடு, தனியார் துறைக்கான கடன் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அண்மையில்  பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ மற்றும் திலின சமரகோன் ஆகியோர் கலந்துகொண்டதுடன்,இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80(2)(அ) பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர்,ஆளும் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதி ஆளுநர்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றம் அல்லது அதன் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். அத்துடன், 26(5) பிரிவின் பிரகாரம்,தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளை அடைவதற்கு மத்திய வங்கி தவறினால், அது தொடர்பான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்போது, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியை அடிப்படையாகக் கொண்ட பிரதான பணவீக்க இலக்கான 5 சதவீதத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும்,எதிர்வரும் மூன்று வருடங்களுக்கும் அந்த இலக்கைப் பேணுவதற்கும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர். பணவீக்கம் இலக்கிடப்பட்ட வரம்பின் கீழ் எல்லையான 3 சதவீதத்திற்கும் குறைவான மட்டத்தில் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் காரணமாக, ஏழு விசேட அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது.

2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 2.1 ட்ரில்லியன் ரூபாவாகும். இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 1.9 ட்ரில்லியன் ரூபாவை விட அதிகமான தொகையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் சுமார் 74 சதவீதமான கடன்கள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும்,குறுகிய காலக் கடன்களின் விகிதம் 42 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அதிகரித்துள்ளமை மற்றும் நீண்டகாலக் கடன்களின் விகிதம் 35 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாகக் குறைந்துள்ளமை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. வங்கிகளினால் வழங்கப்படும் கடன்கள் மூலதனத் திரட்டல்,புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் போதுமான அளவில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், அடகுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் வகைகளின் வளர்ச்சி தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இலங்கையின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நாணயக் கொள்கைக்கு மேலதிகமாக வர்த்தகம், தொழிலாளர் மற்றும் காணி ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, மனித மூலதனத்தை மேம்படுத்துவது,உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் விளக்கமளித்தபோது, வங்கித் துறையின் மூன்றாம் கட்ட செயலிழந்த கடன்களின் விகிதம் 9.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், வங்கிக் கட்டமைப்பின் மூலதன மற்றும் திரவத்தன்மை மட்டங்கள் ஒழுங்குமுறைத் தேவைகளை விட உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 தேசிய அபிவிருத்தி  வங்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு மற்றும் இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் அறிக்கை ஆகியன 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், குறித்த வங்கி தொடர்பில் இலாபப் பங்கீடு, கிளைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பணிப்பாளர் சபை கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சட்டவிரோதமான முறையில் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவங்கள் மற்றும் குரல்களைப் போலியாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி, பொலிஸ் மற்றும்  மெடா நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

இதற்கு மேலதிகமாக, மெய்நிகர் சொத்துக்கள் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் வங்கிகளின் மேற்பார்வை மற்றும் அரச வங்கிகளை ஒன்றிணைத்தல் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.