கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலத்தின் இரும்புத்தட்டுகள் துருப்பிடித்து உடைந்துள்ளதால், அதனைப் பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய சிரமங்களையும் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

நீண்டகாலமாக உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே, பாலத்தின் இரும்புப் பகுதிகள் இவ்வாறு பழுதடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பாடசாலை ஆரம்பமாகும் நேரங்களிலும் முடிவடையும் நேரங்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் இந்நடமாடும் பாலத்தினூடாகவே பாதையைக் கடந்து பயணிக்கின்றனர்.

எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரசபையினர் உடனடியாகத் தலையிட்டு சேதமடைந்த மேம்பாலத்தைச் சீரமைத்துத் தருமாறு பிரதேசவாசிகளும் பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.