கற்பிட்டியில் 882 கிலோ பீடி இலைகள் மீட்பு; கெப் வண்டியும் கைப்பற்றல்
Ad Space
Ad Space
கற்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 882 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் கெப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் கடந்த 25 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ‘விஜய’ கடற்படைக் கப்பலின் சிப்பாய்கள் ஆனவாசல் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, போக்குவரத்துக்காகத் தயாராக இருந்த கெப் வண்டி ஒன்றிலிருந்து 306 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது, அங்குள்ள புதர் மறைவில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 576 கிலோகிராம் பீடி இலைகளையும் கடற்படையினர் மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த எடை 882 கிலோகிராம் ஆகும். சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்களத்தின் விசேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Ad Space
Ad Space