கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா  பங்குபற்றுதலுடன் திங்கட்கிழமை (21) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்  க. ஜெகதீசன், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர்  இ. தயாளன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான  எஸ். கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான  என். எம். அப்துல்லாஹ்,   எஸ். சொரூபன்,   ரி. மயூரன் கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர்  ப. கஜமுகன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவி சிரேஷ்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு வருகை தந்த மாநகர கெளரவ முதல்வர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், கல்லுண்டாய் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதுமான தீர்வொன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இவ் விசேட கூட்டம் கூட்டப்பட்டதாக என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவசரமாகவோ அல்லது ஒரு தரப்பின் கருத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டோ தீர்மானங்களை மேற்கொள்வது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.கல்லுண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பதுடன், அவற்றை ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக மட்டுப்படுத்தாமல், தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தக்கூடிய நிலையான செயற்றிட்டமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.குறிப்பாக, பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, தற்போதைய நிலைமைகளுக்கு பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை நீண்டகால அடிப்படையில் நிலைபேறான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.  கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் :கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவு மேடு எரியூட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் புகைமூட்டத்தால் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாநகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு அனைத்துத் தரப்பினரும் இணைந்தவகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 15 அடி உயர பாதுகாப்பு வேலி :யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதியைச் சுற்றி 15 அடி உயரமான பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பாதுகாப்பு வேலியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக அமைத்து முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு வேலி முழுமையாக அமைக்கப்படும் வரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இரவு நேரங்களில் பொலிஸாரின் கண்காணிப்பை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 20 கண்காணிப்பு கேமராக்கள் :யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் கல்லுண்டாய் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மொத்தம் 20 CCTV பாதுகாப்புக் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 04 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 16 கமராக்களையும் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பொருத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மின்னல் பாதுகாப்பு :குப்பை எரியூட்டல் போன்ற சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் தேவையான 10 நீர்த்தாங்கிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முன்னர் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இடிதாங்கி (Lightning Protection) வசதியைப் பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனர்த்த அபாய முன்னெச்சரிக்கை அறிக்கை : கல்லுண்டாய் பகுதியில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் தொடர்பில் Disaster Risk Assessment மேற்கொண்டு, அவசரநிலை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை யாழ்ப்பாண மாநகர சபைக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேதனப் பசளை உற்பத்திக்கான காணி :கல்லுண்டாய் பகுதியில் கிடைக்கப்பெறும் சேதனக்கழிவுகளைப் பயன்படுத்தி சேதனப் பசளை உற்பத்தித் தளம் ஒன்றை அமைப்பதற்கான அக் காணியில் ஒரு பகுதியினை நிரந்தரமாக வழங்குவதற்கான கோரிக்கை கடிதத்தினை யாழ்ப்பாண மாநகர சபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.பொதுமக்கள் பாதிக்காத வகையில் திண்மக்கழிவு முகாமைத்துவம் : கல்லுண்டாய் பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவுகளை எரியூட்டுவதைத் தவிர்ப்பதுடன், முறையான பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, உக்கக்கூடிய சேதனக்கழிவுகளை மாத்திரம் கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான நடைமுறையைப் பின்பற்றுவதுடன், உக்காத கழிவுகளை அங்கு கொண்டு செல்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், உரிய அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மேற்பார்வைக்கும் வாய்ப்பு :கல்லுண்டாய் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்காக கல்லுண்டாய் பகுதி பொதுமக்களிடமிருந்து 10 பேரின் பெயர் பட்டியல் யாழ்ப்பாண மாநகர சபைக்கு வழங்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் வழங்கி, குறித்த பகுதியை மேற்பார்வையிடுவதற்கான அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை பாதுகாப்பானதும், முறையானதும், சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தீர்மானங்கள் அனைத்தையும் உரிய காலவரையறைக்குள் நிறைவேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது  கல்லுண்டாய் பகுதிக்கு களவிஜயம் :கல்லுண்டாய் பகுதியில் தற்போதுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆராய்வதற்கும், அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கும், அரசாங்க அதிபர், மாநகர சபை   முதல்வர், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின்   தவிசாளர், மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை   உறுப்பினர், மேலதிக அரசாங்க அதிபர், மாநகர சபை ஆணையாளர், பொறியியலாளர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் இன்று மாலை 5.00 மணியளவில் களவிஜயம் மேற்கொண்டனர். களவிஜயத்தின் போது எடுக்கப்பட்ட உடனடித் தீர்மானங்கள் :களவிஜயத்தின் போது, கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் முன்பகுதியில் ஒரு பகுதியை இராணுவத்தினரின் இயந்திர உதவியுடன் சுத்தப்படுத்தி, அவ்விடத்தை உக்கும் கழிவுகளை மாத்திரம் சேகரித்து வைப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட இடமாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.மேலும், இவ்விடத்தில் அப் பகுதி பொதுமக்களின் பங்கேற்புடன் கொண்டு வரப்படும் கழிவுகளைப் பரிசீலித்து, அவை உக்கும் கழிவுகளா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே குறித்த இடத்தில் சேகரிப்பதற்கான நடைமுறையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. உக்கும் கழிவுகளைத் தவிர்ந்த ஏனைய கழிவுகள் கொண்டு வரப்பட்டால், அவற்றை மாநகர சபையினால் மீள எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது.அத்துடன், கல்லுண்டாய் பகுதியில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் கழிவுக் குவியல்களை இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.மேலும், எதிர்காலத்தில் உக்கும் கழிவுகளை உரிய முறையில் சேகரித்து, அவற்றை இயற்கை உரமாக மாற்றும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.