காரைநகர்ப் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தமிழ்மக்கள் கூட்டணியைச் சேர்ந்த கணேசபிள்ளை பாலச்சந்திரன் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர்ப் பிரதேச சபையில் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட சபை அமர்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (17.11.2026) காலை- 09.30 மணி முதல் முற்பகல்-10.15 மணி வரை காரைநகர்ப் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர்ப் பிரதேச சபையில் தமிழ்மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கியதேசியக் கட்சி, சுயேட்சைக் குழு ஆகிய தரப்புக்கள் தலா-2 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ளன. நேற்றைய விசேட சபை அமர்வில் தேசியமக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் தவிர்ந்த பத்து உறுப்பினர்கள் பங்குபற்றினர்.
காரைநகர்ப் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகத் சுயேட்சைக்குழு, தமிழ்மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட சுழற்சி முறை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாவது பதவிக் காலத்தில் கணேசபிள்ளை பாலச்சந்திரன் அடுத்த 16 மாதங்களுக்குத் தவிசாளராகத் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைமையால் நியமிக்கப்பட்ட போதும் அதே கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரான ஆண்டிஐயா விஜயராசா கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி ஐக்கியதேசியக் கட்சியினரால் பிரேரிக்கப்பட்டுப் புதிய தவிசாளர் தெரிவின் போது நிறுத்தப்பட்டார்.
புதிய தவிசாளர் தெரிவின் போது இருவருக்கும் 05 இற்கு 05 என்ற அடிப்படையில் சம அளவிலான வாக்குகள் கிடைத்த நிலையில் இறுதியில் திருவுளச்சீட்டு (குலுக்கல்) மூலம் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை,சுழற்சி ஒப்பந்தத்துக்கமைய 16 மாதங்களாக காரைநகர்ப் பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்து வந்த சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவிந்தராசா அண்மையில் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.