பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இன்று புதன்கிழமை (18.11.2026) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கப்படாமை, குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்படாமை ஆகியவற்றைக் கண்டித்து இன்றைய தினம்  நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.