கிண்ணியா பிரதேச மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் (சுகாதார அமைச்சு) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து வேட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கிண்ணியாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரவு செலவு திட்டம் ஊடாக இம் முறை கிண்ணியா தளவைத்தியசாலை மத்திய அரசின் கீழ் உள்வாங்கவில்லை.கடந்த கால அரசாங்கம் தொடக்கம் ஏமாற்ற பட்டு வரும் நிலை தொடர்கின்றது.
சிவில் சமூக அமைப்புகள் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கையெழுத்து வேட்டையில், வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை, வைத்திய உபகரணங்களின் தேவை மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதே ஒரே தீர்வு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சுமார் ஒரு இலட்சம் வரையான கையொப்பங்கள் இதன் மூலம் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப நிகழ்வில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர். எதிர்வரும் நாட்களில் கிண்ணியாவின் அனைத்துப் பிரதேசங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு, திரட்டப்படும் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


