அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெகுவிரைவில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன இணங்கியுள்ளன.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கங்களின் மிகமோசமான தன்மை குறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இச்சட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்புடுத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன ஏற்கனவே இணங்கியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்டமூலங்களுக்கு எதிராக தெற்கைப் போன்று வடக்கில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுக்காமை தொடர்பில் நிலவும் கரிசனைகள் குறித்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (13) பொதுநிகழ்வொன்றில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும் கலந்துரையாடினர்.
அதனையடுத்து அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெகுவிரைவில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.