ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரையும் அவரது பொறியியலாளரான மகனையும் சட்டவிரோதமாக தடுத்து வைத்து உடல், உள ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உட்பட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, தேசிய மக்கள் சக்தியின் கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 05 பேர் நேற்று வியாழக்கிழமை (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கிரிந்த நகரின் வடிகவத்தை வீதியில் சுவர் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு மூலக்காரணமாகும்.
பாதிக்கப்பட்ட பொறியியலாளர் புதிதாக கார் ஒன்றை வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த நிலையில், பக்கத்து காணியில் வசிக்கும் பிரதேச சபையின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், குறித்த காரை வெளியே எடுக்க முடியாதவாறு சுவரின் ஒரு பகுதியை நிர்மாணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத நிர்மாணம் குறித்து கலந்துரையாடவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை தயாரிப்பதாகவும் கூறி, ஓய்வுபெற்ற ஆசிரியை மற்றும் அவரது மகனை பிரதேச சபைக்கு தவிசாளர் வரவழைத்துள்ளார்.
அங்கு இருவரையும் பிரதேச சபையின் அறையொன்றில் பூட்டி தடுத்து வைத்து உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியமை உட்பட குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், தவிசாளர் உட்பட சந்தேகநபர்கள் 05 பேரையும் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.