அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்டா பைக்கிற்கு ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சிறைச்சாலை ஆணையாளர் ஃபிராங்க் ஸ்ட்ராடா பதவி விலகியுள்ளார்.

அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட டென்னசி மாநில ஆளுநர் பில் லீ, சம்பவம் தொடர்பில் சுயாதீனமான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த ஆண்டுக்கான மாநிலத்தின் அனைத்து மரண தண்டனை நிறைவேற்றங்களையும் இடைநிறுத்தி வைத்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் கொலீன் ஸ்லெம்மர் என்ற பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, கிறிஸ்டா பைக்கிற்கு 1996 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரே பெண் கைதியாக பைக் இருந்து வந்தார்.

கடந்த புதன்கிழமை அவருக்கு ‘பென்டோபார்பிட்டல்’ என்ற மருந்தின் இரண்டு அளவுகள் ஊசி மூலம் செலுத்தப்பட்ட போதிலும், அவர் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, கடுமையான வலியால் அவர் கதறி அழுததுடன், பின்னர் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போது பைக் நஷ்வில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் செலுத்தப்பட்ட மருந்துகளை அகற்றுவதற்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பைக்கிற்கு இரத்தம் உறைவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் மெல்லிய நரம்புகள் காரணமாக, இந்த மரண தண்டனை முறையில் அதிக ஆபத்து இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் முழு மரண தண்டனை நிறைவேற்றும் அமைப்பின் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.