வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளில் ஏற்படக்கூடிய கோளாறுகளை மிகத் துல்லியமாக கண்டறிந்து திருத்தும் பணிகளைச் செய்வதற்காக சீனாவில் ஒரு அதிநவீன ரொபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மின்கம்பிகளில் பாம்பு போன்று ஊர்ந்து சென்று மின் விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறியும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

யுனான் மாகாணத்தில் குன்மிங் பகுதியில் இந்த ரொபோ, மின்கம்பிகளை பழுதுபார்க்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மனிதர்களை விட 3 மடங்கு வேகமாக இந்த ரொபோ இயங்கி, திருத்த வேலைகளை செய்து முடிப்பதாக சீன மின் வாரியம் தெரிவித்துள்ளது. 

மிக உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளில் ஊர்ந்து சென்று,  மின் விநியோக கட்டமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் பிரச்சினைகளையும் கண்டறியும் ஆற்றல் கொண்டுள்ள இந்த ரொபோ, இதுவரை 130 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மின்கம்பிகளை ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மின் விநியோகத் தடை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்கம்பிகளை ஆய்வு செய்ய பொதுவாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ட்ரோன்களுக்குப் பதிலாக இந்த ரொபோவை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது சீனாவில் தீவிரமாகி வருகின்றன.

மின்கம்பி கட்டமைப்புகளுக்குள் மிக நுணுக்கமான பகுதிகளில் காணப்படும் சிக்கல்களை மனிதர்களே கண்டறிய சிரமப்பட்டு வந்த நிலையில், இந்த ரொபோ மின்சாரத் துறைக்கு பெரும் உதவியாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.