குதிரை பேர விவகாரத்தில் மேலும் ஒருவர் சிக்கினார்!
Ad Space
Ad Space
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக மேலும் ஒருவர் சிக்கினார். மேலும் கரூர், கும்பகோணத்தில் நிதி நிறுவனங்களில் போலீஸார் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக அளித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீஸார் ஜூன் 29-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் ரூ.2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியின் உத்தரவின்பேரில், பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் கரூரைச் சேர்ந்த கனகராஜுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் லாலாபேட்டை போலீஸார் சோதனை நடத்தினர். இதேபோல், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலும் பந்தநல்லுார் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, நிதி நிறுவனத்தின் வரவு, செலவு,இருப்பு பதிவேடுகள், கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து, சில ஆவணங்களை போலீஸார் எடுத்துச் சென்றனர்.
ரூ.56 லட்சம் பறிமுதல்: இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவரை பிடித்து திருவல்லிக்கேணி போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து ரூ.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Ad Space
Ad Space