மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும், சென்னை நகருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மீனவர்கள், சூழலியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை நகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ரூ.342 கோடி செலவில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.
இதற்கு அப்பகுதி மீனவர்களும், சூழலியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோவளம் பகுதி மீனவர் ஆர்.நாராயணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மாமல்லன் நீர்த்தேக்க திட்டம் தொடர்பான சென்னை ஐஐடி-யின் சாத்தியக்கூறு அறிக்கையும், நீர்வளத்துறையின் ஆய்வறிக்கையும் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை.
இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் அபாயங்களையும் ஐஐடி-யோ, நீர்வளத்துறையோ மதிப்பீடு செய்யவில்லை. பல தலைமுறைகளாக கடலோரப் பகுதியில் வாழ்ந்து வரும் எங்களுக்கு கடல் என்ன செய்கிறது என்பதை அறிய எந்த அறிக்கையும் தேவையில்லை.
இந்த நீர்த்தேக்கத்தால் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சென்னை நகருக்கும் பாதிப்பு ஏற்படும். மழைக்காலத்தில் மழைநீர் கடலுக்கு செல்வது தடுக்கப்படும். மழைநீர் வடிவது தாமதமாகும். வெள்ள நீரால் சென்னை நகரமும் பாதிக்கப்படும். எனவே இந்த நீர்த்தேக்க திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நெம்மேலி மீனவர் மோகனா கூறும் போது, “பல தலைமுறைகளாக கடலோரப் பகுதியில் இறால், நண்டுகள்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நீர்த்தேக்கத்தால் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்” என்றார்.
சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு தன்னார்வலர்கள் விஷ்வஜா, சுப ஆகியோர் கூறும்போது, “மீனவர்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இதனால், சமூக, பொருளாதாரப் பாதிப்புகள் என தொடர் பாதிப்புகள் ஏற்படும். நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்த சென்னை ஐஐடி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லவில்லை” என்றனர்.
சென்னை இயற்கையியலாளர்கள் சங்கத் தலைவர் கே.வி.சுதாகர் கூறும்போது, “இந்த புதிய நீர்த்தேக்கத்தால் கேளம்பாக்கம், நெம்மேலி, கோவளம் பகுதியில் உயிரி-பன்முகத்தன்மை பெரிதும் பாதிக்கப்படும். அந்த பகுதியில் ஆண்டுதோறும் 123 வகையான பறவையினங்கள் வந்து செல்கின்றன.
அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் 40 வகையான பறவையினங்கள் அங்கு வலசை வருகின்றன. அந்தப் பகுதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” என்றார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை அரசு கைவிட வேண்டும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space