குருக்கள்மடத்தில் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நடைபெற்றபோது மனித எச்சங்கள், நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள், மண்டையோடு உள்ளிட்ட என்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்க முடியும் என சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.
குருக்கள்மடத்தில் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி பகுதியில் இரண்டாம் கட்டத்தின் இறுதிநாள் அகழ்வுப் பணிகள் நேற்று புதன்கிழமை (14) நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் பின்னர் நேற்றிரவு அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குருக்கள்மடம் சந்தேகத்திற்குமான மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கைகள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 6.10.2026 தொடக்கம் 14.10.2026 வரை கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்தன.
மனித எச்சங்கள், நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள், மண்டை ஓடு உள்ளடங்கலான என்புத் தொகுதிகள் பல்வேறு பொருட்கள், வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றிலே சான்றுப் பொருட்களாக பாரப்படுத்தப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன.
எதிர்வரும் காலங்களிலே இந்த அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர் ரஜ் சோமதேவ அவர்களுடைய அறிக்கை மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளுடைய அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பான முழுமையான விபரங்களை எமக்கு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க முடியும்.
எனினும் தொல்லியல் பேராசிரியர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளினால் எமக்கு பகிரப்பட்ட சில விடயங்களின் அடிப்படையில் குறித்த இந்தப் பிரதேசமானது ஒரு குற்றப்பிரதேசமாக காணப்படுவதற்குரிய பல்வேறுபட்ட காரணிகள் இங்கு காணப்படுகின்றன.
இந்த நிலப் பகுதியானது செயற்கையான கட்டமைப்பு மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. குறித்த இந்த பிரதேசம் அதில் அமையப்பெற்றதாக நம்பப்படுகின்ற என்புகள், மனித எச்சங்களை நாங்கள் கண்டடைந்த அந்தப் பகுதியானது குப்பை கூழங்கள் இட்டு செயற்கையான முறையிலே மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்சியையும் எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.
அகழ அகழ குப்பை வந்தது குப்பைக்கு கீழிருந்துதான் என்புப் பகுதிகளை நாங்கள் கண்டோம். எனவே இந்த மனித புதைகுழியானது திட்டமிட்ட அடிப்படையிலேயே மறைக்கப்பட்டிருக்கிறது என்ற அந்த கண்டடைவையும் எங்களால் அறிந்துகொள்ள முடியுமாக இருந்தது.
எனவே இந்த விவகாரம் அனைத்தையும் உள்ளடக்கியதான அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கமுடியும். அதன் பின்னர்தான் எம்மால் கூற முடியும். மிகப் பெரும்பாலும் இந்த அறிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.