இலங்கையின் மருந்து உற்பத்தித் துறையில் புதியதொரு அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், ஹொரனை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்காக 20 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி உயிரியல் அறிவியல் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான சைடஸ் லைஃப்சயின்சஸ் லிமிடெட மற்றும் இலங்கையின் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்திற்குச் சொந்தமான சன்ஷைன் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 'சைடஸ் சன்ஷைன் லைப்சயின்சஸ் தனியார் நிறுவனம்', இலங்கை முதலீட்டு சபையுடன் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி நடவடிக்கைகள் 2028 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இலங்கை முதலீட்டு சபை மேலும் தெரிவித்துள்ளதாவது.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், உள்நாட்டுச் சந்தைக்காக மாத்திரைகள் மற்றும் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும். உள்நாட்டிலேயே தரமான மருந்துகளை உற்பத்தி செய்து, நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் இலகுவாகக் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதில் நாடு தங்கியிருக்கும் நிலையைக் குறைக்கவும் இது உதவும்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சைடஸ் நிறுவனம், உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களையும் 1,500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி விஞ்ஞானிகளையும் கொண்ட சர்வதேச நிறுவனமாகும். அதேபோன்று, இலங்கையின் சன்ஷைன் ஹெல்த்கேர் நிறுவனம் நாடு தழுவிய விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியானது, சர்வதேச மட்டத்திலான தொழில்நுட்ப அறிவையும் உற்பத்தி அனுபவத்தையும் இலங்கைக்குக் கொண்டுவரவுள்ளது.
இப்புதிய தொழிற்சாலையின் மூலம் உருவாக்கப்படும் மொத்த வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை இலங்கையர்களுக்கே வழங்கப்படும்.
அத்துடன், மருந்து உற்பத்தி, தர உறுதிப்பாடு மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள் போன்ற உயர் துறைகளில் உள்நாட்டு ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.