கொழும்பு நகரில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு நகர்ப்புற நீர்வடிகால் கட்டமைப்புகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்புகளை முறையாகவும் தொடர்ச்சியாகவும் பராமரிப்பது அவசியம் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதற்கான காரணங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களைத் தடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் நேற்று மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடையே கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு நகரில் நேற்று (7) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயணிகள், வாகன சாரதிகள், வர்த்தகர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, கொழும்பு பகுதியில் சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி, திம்பிரிகஸ்யாய பகுதியில் 146.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்தமையால், நகர்ப்புற நீர்வடிகால் கட்டமைப்பின் கொள்ளளவைத் தாண்டி மழைநீர் தேங்கியமை கொழும்பு நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, முறையற்ற காணி நிரப்புதல், இயற்கையான நீர் வடிந்தோடும் பாதைகள் தடைப்படுதல், கால்வாய்கள் மற்றும் வடிகான்களில் சேறு, சகதி மற்றும் கழிவுப்பொருட்கள் தேங்கியிருத்தல், அத்துடன் சில நீர்வடிகால் கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாமை போன்ற காரணிகளும் இந்நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளன.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, மழைநீர் விரைவாக வடிந்தோடுவதற்குத் தடையாக உள்ளவற்றை அகற்றும் நோக்கில், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனமும் கொழும்பு மாநகர சபையும் இணைந்து பல்வேறு விசேட நடவடிக்கைகளை இன்று (07) முதல் ஆரம்பித்துள்ளன.

இதற்கமைய, தெமட்டகொடை சேர்பன்டைன் கால்வாய், டொரிங்டன் கால்வாய், தெஹிவளை கால்வாய் மற்றும் கிருலப்பனை பகுதிகளை அண்மித்த கால்வாய்கள் ஆகிய இடங்களில் நீர் முறையாக வடிந்தோடுவதற்குத் தடையாக உள்ளவற்றை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுப்பொருட்கள், சேறு, சகதி மற்றும் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ள ஏனைய பொருட்களை அகற்றுவதன் மூலம் மழைநீர் வடிந்தோடும் செயற்பாட்டை வழமைக்குக் கொண்டுவருவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவசரகால நிலைமைகளில் நீர் வடிந்தோடுவதற்குத் தடையாக உள்ளவற்றை அகற்றுவதன் மூலம் மாத்திரம் கொழும்பு நகரின் வெள்ளப்பெருக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.

அதற்காக நகர்ப்புற நீர்வடிகால் கட்டமைப்புகளின் கொள்ளளவை அதிகரித்தல், இயற்கையான நீர் வடிந்தோடும் பாதைகளைப் பாதுகாத்தல், முறையற்ற காணி நிரப்புதல்களையும் கால்வாய் ஒதுக்குப் பகுதிகளை அண்மித்த சட்டவிரோத நிர்மாணங்களையும் கட்டுப்படுத்துதல், அத்துடன் கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்புகளை முறையாகவும் தொடர்ச்சியாகவும் பராமரித்தல் ஆகியவை அத்தியாவசியமானவை என்றார்.