கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பதுடன், நகரை மீண்டும் ஆசியாவின் அழகிய நகரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கும் மாநகர சபை பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு நகரம் நாட்டின் முக்கியமான அடையாளமாகும். அதன் தூய்மை, அழகு, ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாநகர சபையின் பொறுப்பாகும். மழை பெய்யும்போது நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது இயல்பான ஒன்றாகக் கருதப்படக்கூடாது. இதற்கு மழையை மட்டும் காரணமாகக் கூறி நிர்வாகம் தனது பொறுப்பிலிருந்து விலக முடியாது.

வடிகால் கட்டமைப்புகள், கால்வாய்கள் மற்றும் நீர் வழிந்தோடும் பாதைகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். வெள்ளம் ஏற்பட்ட பின்னர் நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிட, பாதிப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே முக்கியமானதாகும். இதற்கான திட்டமிடலும் தொடர்ச்சியான கண்காணிப்பும் அவசியம்.

நகரின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சினைகளை அறிந்துகொள்ள மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட குழுக்களை அமைத்து, அப்பகுதி மக்களின் தேவைகளையும் கருத்துகளையும் நேரடியாக அறியலாம். இதன்மூலம் குப்பை அகற்றல், வடிகால் பராமரிப்பு, தூய்மை மற்றும் பொதுச் சேவைகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும்.

நகரின் மரங்கள், பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளைப் பாதுகாப்பதும் அவசியமாகும். நகர அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கைச் சூழல் அழிக்கப்படக்கூடாது. மாநகர சபை மக்களிடமிருந்து வரி மற்றும் கட்டணங்களை அறவிடும்போது, அதற்கேற்ப உரிய சேவைகளையும் வழங்க வேண்டும். மக்களின் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் இருக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது நிர்வாகத்தின் கடமையாகும்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மாநகர முதல்வர்களான எம்.எச். மொஹமட், எம். {ஹசைன் மொஹமட், ரத்னசிறி ராஜபக்ஷ உள்ளிட்டோரின் நிர்வாக அனுபவங்களையும் நினைவுகூர்ந்த அவர், கடந்தகால அனுபவங்களிலிருந்து தற்போதைய நிர்வாகம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். வி.ஆர். ஸ்கோக்மன், ஏ.ஈ. குணசிங்க, ஜோர்ஜ் ஆர். டி சில்வா, டாக்டர் என்.எம். பெரேரா, வி.ஏ. சுகததாச, எம். வின்சென்ட் பெரேரா, ஏ.எச்.எம். பௌஸி, பி. சிறிசேன கூரே உள்ளிட்டோரும் மாநகர முதல்வர்களாகப் பதவி வகித்துள்ளனர்.புவியியல் காண்

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நகரின் நலனை முன்னிறுத்தி அனைவரும் செயற்பட வேண்டும். கொழும்பைத் தூய்மையான, பாதுகாப்பான, அழகிய நகரமாக மாற்றுவதற்கான பொறுப்பு மாநகர சபையிடமே உள்ளது. உரிய நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படாவிடின், மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே, மாநகர சபை தனது பொறுப்பை உணர்ந்து உடனடியாகச் செயற்பட வேண்டும்.

நகர நிர்வாகத்தில் நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்படுவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவும் பொறுப்பாளர்களும் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வப்போது முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்பட்டு, மக்களுக்கு அதன் விபரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.