கொழும்பு மாநகர சபை மேயர், மழை வெள்ளம் குறித்து தவறான தகவல்களை வழங்குவதுடன், லண்டன் போன்ற நகரங்களின் மேயராகத் தன்னைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். ஆனால் கொழும்பின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்கத் தெரியவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் வடிகால் அமைப்பால் 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்க முடியும் என்றும், 129 மில்லிமீற்றர் மழை பெய்தமையாலேயே கொழும்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

கடந்த 1992 ஆம் ஆண்டில் 440 முதல் 493 மில்லிமீற்றர் வரையிலும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமாகவும் கொழும்பில் மழை பதிவாகியிருந்த போதிலும், கடந்த 32 ஆண்டுகளில் (1992 முதல் 2024 வரை) கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்று நீரில் மூழ்கியதில்லை என சுட்டிக்காட்டினார்.

வடிகால்களும் கால்வாய்களும் உரிய முறையில் துப்பரவு செய்யப்படாமல் அடைபட்டுப் போயிருந்தமையே, குறுகிய நேர மழையினால் உடனடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் வடிந்தோட முடியாமல் பல மணிநேரம் வீதிகளில் தேங்கி நின்றதற்கு முதன்மைக்காரணம் என அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒக்டோபர் இறுதி முதல் நவம்பர் மாத காலப்பகுதியில் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜனாதிபதி தலைமையிலான பேரிடர் முகாமைத்துவக் கூட்டத்தில் தாமும் பங்கேற்றிருந்தேன்.அரசுச் செய்திகள்

இந்த காலநிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து, எதிர்வரும் மழையை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பின் வடிகால்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவசரமாகத் துப்பரவு செய்யுமாறு பிரதமரும் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறான உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்ட உத்தரவுகளும் இருந்தபோதிலும், நவீன விஞ்ஞானத் தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் மாநகர நிர்வாகம் திட்டமிட்டு அலட்சியமாகச் செயல்பட்டுத் தமது கடமையை முற்றாகக் கைவிட்டுள்ளது.

ஒரு மாநகர சபையின் முதன்மையான பொறுப்பு என்பது நாளாந்தம், வாராந்த மற்றும் மாதாந்த அடிப்படையில் குப்பைகளை அகற்றுவது, வடிகால்களைச் சீரமைப்பது, நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் புகை விசிறல் மற்றும் உடைந்த வீதி விளக்குகளைப் பழுதுபார்ப்பது போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்குவதாகும்.

அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான சுத்தமான மலசலகூடங்கள், ஆடை மாற்றும் இடங்கள் மற்றும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட தற்போதைய நிர்வாகத்தால் ஏற்படுத்த முடியவில்லை.

தேர்தல் காலத்தில் கொழும்பு நகரை உலகின் மிக நவீன நகரமாக மாற்றுவோம் என்றும், சகல துறைகளிலும் துறைசார் விஞ்ஞானிகள் தம்மோடு இருப்பதாகவும் வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது புறக்கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு கண்காணிப்புக் கமராவைப் பொருத்தி வர்ணம் பூசுவதையும், சிறியதொரு வடிகால் அமைத்ததை முகநூலில் பதிவிடுவதையும் மட்டுமே பெரிய சாதனைகளாக விளம்பரப்படுத்துகின்றனர்.புவியியல் காண்

கொழும்பு மாநகர சபை என்பது பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் கோடிக்கணக்கான குப்பை அகற்றல் ஒப்பந்தங்கள் மூலம் பெரும் வருமானத்தைக் கொண்ட ஒரு செல்வந்த அமைப்பாகும். அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறத் தேவையில்லாத அளவுக்கு மாநகர சபைக் கணக்குகளில் பெருமளவு நிதி தேங்கிக் கிடக்கின்ற போதிலும், அதனை மக்கள் நலனுக்காகவும் வடிகால் பராமரிப்பிற்காகவும் திட்டமிட்டுச் செலவிட நிர்வாகத்திற்குத் தெரியவில்லை.

இதன் விளைவாகவே மாளிகாவத்தை, புறக்கோட்டை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, திம்பிரிகஸ்யாய மற்றும் ஜாவத்தை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, இரவு 11 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் சிறிய வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள் போன்ற பெறுமதியான உடமைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பாரிய அனர்த்தத்தின் போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையோ அல்லது ஏனைய மக்கள் பிரதிநிதிகளையோ ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்காமல் மாநகர நிர்வாகம் புறந்தள்ளி ஒதுக்கி வைத்துள்ளது. எனவே, வரி செலுத்தியும் உரிய சேவைகளைப் பெறத் தவறியமைக்காகவும், அடிப்படை உரிமை மீறல்களுக்காகவும் மாநகர சபைக்கும் அதன் தலைமைக்கும் எதிராக நீதிமன்றத்தை நாடுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, தம்மை லண்டன் மேயர் போல நினைத்துக் கொள்ளும் தற்போதைய மாநகரசபை மேயர் கொழும்பை நிர்வகிக்கும் தகுதியற்றவர் என்றும், அவர் செய்தி வாசிப்பது அல்லது சந்தைப்படுத்தல் போன்ற பணிகளுக்கே பொருத்தமானவர் என்றும் தெரிவித்த எஸ்.எம்.மரிக்கார், அவரை உடனடியாகப் பதவி விலகுமாறும், தவறினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன் வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் வரிச் சலுகைகள் மற்றும் வாக்குறுதிகள் தொடர்பில் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.