சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிடமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதில் 13 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததுடன், 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதனையடுத்து, 13 வாக்குகள் ஆதரவுடன் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, 7 மேலதிக வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள், விசேட தேவையுடையோர், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக 2.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்துவதற்காக 0.75 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சேவைகள், தாய்சேய் பராமரிப்பு, சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் போசாக்கு உணவுகள் வழங்குவதற்காக 0.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.