முன்னாள் அமைச்சர் சரண குணவர்த்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றிய காலப்பகுதியில் சுமார் 1,980,000 ரூபா பணத்தை சட்ட விரோதமான முறையில் விடுவித்ததாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ள வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்ற 11 ஆம் இலக்க நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுழில் இருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
சரண குணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு, இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் தற்போது நிவையில் உள்ள நிலையில், இவ்வழக்கில் இருந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மேல் நீதிமன்ற நீதிபதியின் தனிப்பட்ட உதவியாளர் மூலம் குறித்த நீதிபதிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பில், குறித்த நீதிபதியால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் குறித்த வழக்கு விசாரணை அந்த நீதிபதி முன்னிலையில் நடைபெற முடியாது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வழக்கை வேறு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குப் பரிந்துரை செய்யுமாறும், அதுவரை இலக்கம் 11 மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரரான முன்னாள் அமைச்சர் கோரியுள்ளார். மனுதாரரான முன்னாள் அமைச்சர் சார்பில் 'ரம்சிபாச்சா' சட்டத்தரணிகள் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜரானார்.