நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கடுழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையைச் சிறைச்சாலை அதிகாரிகள் அகற்றியமையைச் சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் பல ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீனியாவல பாலித்த தேரர், அகலக்கட ஸ்ரீ சிறிதமன தேரர், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட தேரர்கள் பலர் இந்த ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எடுத்த நடவடிக்கையானது சட்டத்திற்கு விரோதமானது எனவும், அவரது அந்த உத்தரவினையும் நடவடிக்கையினையும் தடைசெய்து உத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்குமாறும் இந்த மனுக்கள் ஊடாகக் கோரப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இந்த மனு பரிசீலனைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய இந்த மனு பரிசீலனையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் தான் அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக ஆஜராகி அவ்வழக்கை நெறிப்படுத்தியுள்ளதாகவும், அதனால் இந்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து தான் விலகிக்கொள்வதாகவும் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய அறிவித்தார். அதன்படி இந்த மனு இன்றைய தினம் மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றின் விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி நீதிபதி அமல் ரணராஜா, நீதிபதி மஹேன் கொபல்லாவ மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளன. மனுதாரர்களான தேரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகினஹேவா, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உள்ளிட்ட தரப்பினர் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.