அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை நோக்கியே அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண சாடியுள்ளார்.
எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் கொண்டுவரத் தயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் என்பன மக்களின் பேச்சுச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் முற்றாக நசுக்கும் செயலாகும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது இச்சட்டங்களை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தற்போதைய அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் சுனில் வட்டகல ஆகியோர், இன்று பதவிகளை அடைந்ததும் அதே அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைகின்றனர்.
இச்சட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
பிடியாணை இன்றியே காவல்துறை அல்லது முப்படையினர் சாதாரண மக்களைக் கைதுசெய்யக்கூடிய சட்டங்களைக் கொண்டுவந்து நாட்டை வட கொரியாவாக மாற்றவே அரசாங்கம் பார்க்கிறது.
மேலும், 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீதிமன்றத்திற்கு அரசியல் அழுத்தங்களை வழங்கி வருகிறது. அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்காத கம்பஹா நீதவான் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதே இதற்குப் பிரதான சான்றாகும்.
நவம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை வரவு - செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டில் இச்சட்டங்களைக் கொண்டுவர முடியாது என்பதை அரசாங்கம் அறியும்.
ஆனால், அடுத்த ஆண்டில் இச்சட்டங்களைக் கொண்டுவர முயன்றால் மக்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி வீதியில் இறங்கிப் போராடும்.
அத்துடன், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளான அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, மின்கட்டணத்தைக் மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தல், எரிபொருள் விலை சூத்திரத்தை நீக்கி துறைமுக இறக்குமதி விலைக்கு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வரவு - செலவுத் திட்டத்தில் நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.