எதிர்வரும்- 14 ஆம் திகதி சனிக்கிழமை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆரம்பத்தில் மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அடைந்து அதன் பின்னர் வடக்கு நோக்கி இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகர்ந்து தமிழகத்துக்குச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகரும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. இதனால், இலங்கையின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும்- 15 ஆம் திகதி முதல் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, எதிர்வரும் 15,16,17 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, தெற்கு, வடமேற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 250 மில்லிமீற்றர் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

தாழமுக்கம் கிழக்கு மாகாணத்தை நோக்கி நகரும் போது கிழக்கு, தெற்கு, ஊவா, மேற்கு மாகாணங்களும், இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அண்மித்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் போது வடக்கு, கிழக்கு,வட மேற்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவா மாகாணங்கள் கனமழையைப் பெறும். இப் பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையை அண்மித்து நகரும் முதல் தாழமுக்கம் இதுவாகும். தற்போது இலங்கை முழுவதும் கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாகவும் இலங்கையின் தெற்கே காணப்படும் வளிமண்டல தளம் பல் நிலை காரணமாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும்- 14.11.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்றைய (09) தினத்துக்குப் பின்னர் மழை தீவிரமடையும். அந்த வகையில் இன்றும் (09.11.2026), நாளையும் (10), நாளை மறுதினமும் (11) வடக்கு,மத்திய, சப்ரகமுவா, தெற்கு, மேற்கு, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக் கூடும்

உருவாகவுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 15,16,17 ஆம் திகதிகளில் கிழக்கு, வடக்கு, மேற்கு, வடமேற்கு ,மத்திய, தெற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்த வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.