யாழ். நல்லூரில் தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிரென மதித்து ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.

திருவுருவச்சிலை அமைந்திருந்த இடத்திற்கு நேற்றுக்காலை 6.30 மணியளவில் சுமார் 15 பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்திருந்ததோடு, சிலையை அகற்றி அங்கிருந்து தமது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நேற்று முன்தினம் குறித்த நினைவிடத்தில் பெருந்திரளானவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே அச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினருக்கு எந்த விதமான முன்னறிவித்தலும் வழங்காமல் அவ்விடத்திற்கு இரண்டு  வாகனங்களில் வருகைதந்திருந்த பொலிஸார் சிலையை அகற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாகதீபம் திலிபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ வூட்லர் தெரிவிக்கையில், குறித்த சிலை சம்பந்தமாக எமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே அது அகற்றப்பட்டது.

குறிப்பாக, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில், 'எல்லான் படை' என்ற குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஏற்கனவே விளக்கமளித்துள்ளனர். அத்துடன் அவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன் திலீபனின் நினைவேந்தலுக்காக யாழ். மாநகர சபையினால் 26-09-2026 வரையே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்து என்றார்.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலை பொலிஸாரால் பலவந்தமான முறையில் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது,

திலீபன் அண்ணாவின் சிலை அகற்றல் சம்பந்தமாக எங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வழங்காமல் திடீரென வாகனங்களில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதணிகளுடன் வந்து அந்த சிலையை உடைத்துச்சென்றதாக எங்களுடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனா.

தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலையை உடைத்துச் சென்றமையை வன்மையாக கண்டிக்கின்றேன அநுர அரசாங்கத்தின் இனவெறியின் மற்றுமொரு முகத்தை வெளிப்படுத்துகின்றது. அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தன்னுடைய முகவர்களைப் பயன்படுத்தி தேர்தல் காலப்பகுதியில் நினைவேந்தல்களை அனுமதிப்போம், சிலைகளை நிறுவுவோம் என்று மேடை மேடையாகச் சொல்லியிருந்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ போன்றோருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனப்பான்மை ஒரே மாதிரி இருக்கின்றது என்பதை இந்த செயற்பாடு உறுதிப்படுத்துகின்றது.

திலீபன் அண்ணாவின் திருவுருவச்சிலையை உடைத்து அகற்றியதன் மூலம் அநுர அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதுடன் இழிவுபடுத்தியிருக்கின்றது. தமிழரசுக்கட்சியும் அநுர அரசும் இணைந்து தான் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றன.

ஏனென்றால் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானத்துடன் திலீபன் அண்ணாவின் சிலை வைக்கும் விடயம் சம்பந்தமாக உரையாடியபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ஆகவே தான் அவர்களின் பின்னணியும் இந்த அகற்றத்தில் உள்ளது.

அதாவது, கடந்த 18ஆம் திகதி திலீபன் அண்ணாவின் நினைவேந்தலுக்காக நல்லூரில் உள்ள திலீபன் நினைவேந்தல் பூங்காவில் ஒலி பெருக்கிக்கான அனுமதியை பெற யாழ்.மாநகரசபை மேஜரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கட்சி தலைமை தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நான் சி.வி.கே. சிவஞ்ஞானம் ஐயாவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் என்னிடம் மிக காட்டமாக கேட்டார், நீங்கள் யாரை கேட்டு இந்த சிலை வைக்கின்றீர்கள், 26ஆம் திகதியோடு இந்த சிலை அகற்றப்படவில்லை என்றால் நான் இந்த சிலையை எடுப்பேன் என்று என்னிடம் தெரிவித்தார்.

அவருடைய கூற்றில் கோபம் இருந்தாலும் அவர் இவ்வளவு கீழ்த்தரமாக செயற்படுவார் என்று நான் எதிர்பாக்கவில்லை பொலிஸாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டிருக்கின்றது என்பதுடன் தமிழரசு கட்சியும் அநுர அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த செயற்பாட்டிற்கு தமிழரசுக் கட்சி பொறுப்பேற்க வேண்டும் என்றார்.