“சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து, சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்துக் கொண்டிருக்கிறது,” என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாளை (அக்.31) சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதே போல மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து, சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்துக் கொண்டிருக்கிறது.

தவெக ஆட்சி அமைவதற்கு முன்னால், அக்கட்சியின் தலைவரும் இன்றைய முதல்வருமான விஜய் அனைத்துக் கூட்டங்களிலும் என்ன பேசினார்? ‘தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; குழந்தைகள் - பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; போதைப் பொருட்களால் குற்றங்கள் நடக்கிறது’ என்று இதை மட்டும்தான் தொடர்ந்து பேசி ஆட்சிக்கு வந்தார்.

‘கத்தி கத்தி’ பஞ்ச் டயலாக் பேசியவரின் ஆட்சியில் இன்றைக்கு என்ன நிலைமை? பட்டப்பகலில் முக்கியச் சாலைகளில் கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிப்பது என எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள்.

குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த அரசின் மீது பயமில்லை. கிரிமினல்கள் இதை அவர்களுக்கான ஆட்சியாகக் கொண்டாடுகிறார்கள். தலைநகரான சென்னையிலேயே மயிலாப்பூர், அடையாறு, தரமணி போன்ற மிக மிக முக்கியப் பகுதிகளிலேயே கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வரும் வழியிலேயே அரிவாளால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். நீதிமன்ற வளாகத்தின் எதிரிலேயே வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள்.

பல மாவட்டங்களில் இரட்டைக் கொலைகள் நடக்கின்றன. கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். புழல் சிறைச்சாலையில் இருந்தே கைதிகள் தப்பிச் செல்கிறார்கள். தேனி மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து ஒரே இரவில் 17 பேர் மெயின் கேட்டைத் திறந்து சாவகாசமாக தப்பித்திருக்கிறார்கள். நடுரோட்டில் கொலை செய்துவிட்டு, எந்தப் பதற்றமும் இல்லாமல் பைக் மற்றும் ஆட்டோக்களில் ஏறி குற்றவாளிகள் செல்கிறார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் முதல்வர் பார்க்கிறாரா இல்லையா என்று கூட நமக்குத் தெரியவில்லை. இந்தச் செய்திகள் அவர் காதுக்குப் போகிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் இப்படி எதுவுமே நடக்காதது போலத்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன.

எல்லாக் கட்சிகளும் அறிக்கை விடுகிறார்கள்; கண்டனம் தெரிவிக்கிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், முதல்வரிடம் இருந்து எந்தவிதப் பதிலுமில்லை. இன்னும் சினிமா படப்பிடிப்பு காலத்தில் கேரவனுக்குள் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்வது போல, யாராலும் அணுக முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.

காவல்துறைக்கு முதல்வர்தானே பொறுப்பு? அவர் பதில் சொல்ல வேண்டுமா இல்லையா? அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமா இல்லையா? ஆனால், இது எதுவுமே நடப்பதில்லை. எல்லாத் துறைகளுக்கும் ஒரு சில அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். அந்தப் பதிலும் பொறுப்பற்ற பதில்களாக இருக்கின்றன.

ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும், எல்லாவற்றிற்கும் ‘திமுக, திமுக’ என்று சொல்வதுதான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்குப் பாதி குற்றச் சம்பவங்களில் தவெக கட்சிக்காரர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் எங்கும் செல்ல வேண்டியதில்லை; தன்னுடைய கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும். அதாவது, பெண்களை தவெக காப்பாற்ற வேண்டியதில்லை; தவெக-விடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.

பொதுவாக, எல்லாக் கட்சியிலும் ஒரு சில களைகள் இருக்கலாம். ஆனால், களைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் போய் சேர்ந்திருக்கின்ற கட்சியாக இந்தத் தவெக இருக்கிறது.

அதிலும், ‘மெத் பூபாலன்’ என்பவர் சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய அரசின் டி.ஆர்.ஐ அமைப்பிடம் மாட்டியிருக்கிறார். தமிழகத்தை போதை உற்பத்தி மையமாக மாற்றி, உலகம் முழுவதும் ‘மெத்’ சப்ளை செய்வதுதான் இவருடைய வேலை. இவர் ஒரு தவெக நிர்வாகி. ஆனால், இந்தச் செய்தியை வெளியிட்டால் கொன்றுவிடுவோம் என்று தவெக ஒன்றியச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்குத் தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறார். இதுதான் தூய சக்தியா?

தவெக நிர்வாகியான மெத் பூபாலன் போதைப்பொருள் உற்பத்தி மூலமாகச் சம்பாதித்த பணம்தானே, நாகை மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் தவெக-வின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்? அதனால்தான் பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்களா? இதையெல்லாம் முறையாக விசாரிக்க வேண்டாமா?