மின் தட்டுப்பாடு என்பது இந்தியா முழுவதும் உள்ளது. அதிகமான மாநிலங்களில் மின்வெட்டு உள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தவெக சார்பில், அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளன. தேனி சிறையில் கதவுகள் பூட்டப்படும் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை பயன்படுத்தி கைதிகள் தப்பித்து சென்றுள்ளனர்.
தேனி சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம். சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சீரமைப்பதற்கு கடந்த பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்கியிருந்தோம். விரைவில் இவற்றை சரி செய்வோம்.
நேற்று மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனத்தின் போது மின்வெட்டு ஏற்பட்டதாக கூறபடுகிறது. முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருவதால், நேற்று ஜெனரேட்டர் மூலமாக மின் சேவை வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த இணைப்பு மாற்றத்தின் போது மட்டுமே சற்று நேரம் மின்தடை இருந்துள்ளது.
மின்துறைக்குள் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர். இது குறித்து பொறுப்பில் இருக்கும் நான் அதிகமாக பேச முடியாது. நீண்ட கால நோக்கில் இவற்றை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம்.
அதிக விலை கொடுத்து மின்சாரத்தை இன்னும் கொள்முதல் செய்யவில்லை. டெண்டர் தான் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மீண்டும் டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து இதுபோன்று செயல்படுகின்றனர். மின் தட்டுப்பாடு என்பது இந்தியா முழுவதும் உள்ளது. அதிகமான மாநிலங்களில் மின்வெட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.