தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) தலைமையிலான தூதுக்குழுவினர், நேற்று திங்கட்கிழமை (23) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதையும், இரு நாட்டு வர்த்தக சமூகத்தினருக்கும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் இலக்காகக் கொண்டு, இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் சாதாரண கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 30 நாள் காலப்பகுதிக்கு விசா இன்றித் தாய்லாந்துக்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், கடந்த நவம்பர் 22ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் பரிமாற்றத் திட்டங்களையும் இலகுபடுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான நகர்வாகும் என இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலாத் தொழில்துறையுடன் தொடர்புடைய பங்குடைமைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்து சமுத்திரத்தின் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தனித்துவமான புவியியல் அமைவிடத்தையும், முக்கிய கடல்சார் மற்றும் துறைமுக மையமாக அதன் வகிபாகத்தையும் கருத்தில் கொண்டு, கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

அத்துடன், உணவுப் பதப்படுத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிபுணத்துவ அறிவுப் பகிர்வு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி, விவசாயத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

2027 ஜனவரியில் நடைபெறவுள்ள 'எக்ஸ்போ ஸ்ரீலங்கா' (Expo Sri Lanka) கண்காட்சியில் பங்கேற்று, இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது அழைப்பு விடுத்தார்.

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் ஊடாகப் பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

'டித்வா' சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகத் தாய்லாந்து அரசாங்கத்துக்குத் தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்சார் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் பைட்டூன் மஹபன்னாபோர்ன் (Paitoon Mahapannaporn) உள்ளிட்ட தூதுக்குழுவினரும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.