கொழும்பு பொரளை, வோர்ட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (23) திங்கட்கிழமை மாலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீயணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்ட வேளையில் குறித்த கட்டடத்திற்குள் சிக்கியிருந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட உள்ளே இருந்தவர்கள் பொரளை பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டடத்துக்குள் இருந்தவர்களில் புகையை சுவாசித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளில் பொரளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.