சுகாதாரத் துறையின் வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள்!
Ad Space
Ad Space
சுகாதார சேவையை வினைத்திறனான முறையில் கொண்டு செல்வதற்குப் போதியளவான மனித வளம் இல்லாமையால், சுகாதாரத் துறையில் வெற்றிடமாக உள்ள பிரிவுகளுக்கான புதிய நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் 92 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பிரதான மருத்துவ ஆய்வகம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை (14) பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டன. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயතිஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
"சுகாதாரத் துறையில் கடந்த அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தப்பட்ட வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பித்து நிறைவு செய்ய இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சுகாதார சேவையை பொதுமக்களிடம் வினைத்திறனான முறையில் கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான மனித வளத் தேவை உள்ளமையால், தற்போது வெற்றிடமாக உள்ள துறைகளுக்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தகுதிவாய்ந்த தாதியர்களை அதிகளவில் பயிற்றுவித்து வருவதுடன் புதிய நியமனங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சுகாதார சேவை நியமனங்களின் போது எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. நிதியமைச்சுடன் கலந்துரையாடி அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்கான அனுமதியைப் பெற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது. நவீன உலகிற்கு ஏற்ப தரமான சுகாதார சேவையை வழங்குவதே எமது நோக்கம். அவசர சிகிச்சை பிரிவுகளைப் பலப்படுத்த சுகாதார அமைச்சினுள் தனிப் பணிப்பாளர் அலுவலகம் ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது" என்றார்.
Ad Space
Ad Space