பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் மோசமடைந்து வரும் சுகாதார நிலைமை குறித்து உடனடியாக அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி, சர்வஜன அதிகாரம் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்னவினால் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் மனித உரிமைகள் மற்றும் மருத்துவத் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக ஒரு துணிச்சலான போர்வீரனாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆற்றிய தனித்துவமான சேவையை நாம் பெரிதும் மதிக்கின்றோம். தேசத்துக்காக அவர் செய்த அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் எவராலும் மறந்துவிட முடியாது என்பதுடன், இவ்வாறானதொரு போர்வீரனுக்கு தற்போதைய சூழ்நிலையில் உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும்.
எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, அவரது சுகாதார நிலைமை நாளுக்கு நாள் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விடுத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது, அவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்த தரப்பு என்ற வகையில் ஜனாதிபதியாகிய தங்களின் நேரடிப் பொறுப்பாகும் என நாம் கருதுகின்றோம்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை தொடர்பாக ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அது உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியிலும் இலங்கையின் நற்பெயருக்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் நாட்டுக்கு உள்ள நம்பகத்தன்மைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எமது நிலைப்பாடாகும்.
அதேவேளை, தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்த அதிகாரம் என்ற வகையில் அதன் நேரடிப் பொறுப்பு தங்கள் மீதே சுமத்தப்படும்.
எனவே, மனிதாபிமான அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த விடயம் குறித்து உடனடியாக அவதானம் செலுத்தி தாமதமின்றி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்குழு சார்பில் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேவின் சுகாதார நிலை குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space