பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஆகியோரின் சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
அவர்களது சொத்துக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் பின்னர் எழுந்த முரண்பாடுகளைக் கருத்தில்கொண்டு, முழுமையான விசாரணையை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அந்ததுள்ள ஐந்து அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சருக்கு எதிராக சிவில் உரிமைச் செயற்பாட்டாளர் ஜாமுனி கமன்த துஷார டி சில்வா அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கும் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறித்த நபர்களின் ஆரம்ப சொத்து பிரகடனங்களுக்கும், பின்னரான பிரகடனங்களுக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இந்த விரிவான விசாரணை முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சிவில் உரிமைச் செயற்பாட்டாளர் ஜாமுனி கமன்த துஷார டி சில்வாவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சொத்துக்களின் சந்தைப் பெறுமதி, விலைகளின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சில சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இருப்பினும், மேலதிக சொத்துக்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால் ஆணைக்குழுவுக்கு மேலதிக விசாரணைகள் அவசியமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.