உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், இடையீட்டு மனுதாரராக இணைந்து விடயங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால மனுக்கள் மீதான உத்தரவு எதிர்வரும் 22 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

மேற்படி இடையீட்டு மனு மீதான பரிசீலனை புதன்கிழமை (14) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இந்த இடையீட்டு மனுக்கள் மீதான உத்தரவு புதன்கிழமை (14) அறிவிக்கப்படவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த மனுக்கள் மீதான உத்தரவை ஒத்திவைத்து எதிர்வரும் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. பெங்கமுவே நாலக்க தேரர்,  கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  மற்றும் தன்னார்வ அமைப்புகளால் இந்த இடையீட்டு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தன்னைக் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த ரிட் மனுவில் இடையீட்டு மனுதாரராக இணைந்து விடயங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரி மேற்படி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.