வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் திருமதி. பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா இன்று புதன்கிழமை (14.10.2026) மாலை யாழ் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
குறித்த பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய வாசலைத் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர் கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ, கியூபா தொடர்பாகத் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகத் தெரிவித்ததுடன் முதல்தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பாக வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
