மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் மற்றும் அரசியல் நியமனங்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி முற்றாக நிராகரித்துள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நியமனங்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நியமனத்திலும் எவ்வித அரசியல் தலையீடும் இடம்பெறவில்லை. தற்போதைய அரசாங்கம் முற்றிலும் தகுதி, திறமை மற்றும் முறையான விதிகளின் அடிப்படையிலேயே நியமனங்களை வழங்கி வருகிறது.
கடந்த காலங்களில் மாவட்ட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் தங்களுக்கு தெரிந்தவர்களை நியமிக்கும் முறைகள் இருந்தபோதிலும், தற்போதைய ஆட்சியில் உறவினர்கள், நண்பர்கள் அல்லது கட்சி ஆதரவாளர்களுக்கு நியமனம் வழங்கும் நடைமுறை முற்றிலும் இல்லை.
கடந்த 8 முதல் 10 வருடங்களாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குச் சுற்றாடல் அதிகாரிகள் நியமிக்கப்படாமையினால், நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய நெருக்கடி நிலவி வந்தது. இதனால் தற்போதைய தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இதற்கான நியமன நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
ஆரம்பத்தில் இப்பரீட்சையைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஊடாக நடத்த முயற்சிக்கப்பட்ட போதிலும், நேர்முகத் தேர்வு மற்றும் பரீட்சைப் புள்ளிகள் தொடர்பான அவர்களின் விதிமுறைகள் காரணமாக அதனை நடத்த முடியாமல் போனது. இதனால் பரீட்சை நடத்தும் தகுதியுடைய இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்திடம் (SLIDA) இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 3-4 வருடங்களாகச் சுற்றாடல் அதிகாரிகளின் பணிகளை மேற்கொண்டு வந்த அபிவிருத்தி அதிகாரிகளின் அனுபவம் மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான சாத்தியமான வாய்ப்புகள் குறித்து நிதி அமைச்சினூடான கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன. மேலும், பரீட்சையின் போது சுட்டெண்கள் தொடர்பான சில சிக்கல்கள் ஏற்பட்டதால், சுட்டெண் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். பரீட்சையின் பின்னர் அமைச்சுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து சுற்றாடல் அமைச்சு விசாரணையை மேற்கொண்டது.
இவ்விசாரணையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சார்பில் எந்தத் தவறும் இடம்பெறவில்லை என்பதும், பரீட்சையை நடத்திய நிறுவனத்தின் அறிக்கையின்படி எவருக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என்பதால் தகுதிபெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்கள் கசியவோ அல்லது அரசியல் செல்வாக்கு ஊடுருவவோ வாய்ப்பே இல்லை எனவும், பிரதி அமைச்சருக்கோ, அமைச்சருக்கோ இதில் தலையிட அதிகாரம் இல்லை என்று 100 சதவீதம் உறுதி அளிக்க முடியும். இந்த நியமனங்களில் அநீதி இழைக்கப்பட்டதாகவோ அல்லது அரசியல் தலையீடு இருப்பதாகவோ யாராவது கருதினால் நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.