ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் ஆவார். அதற்கு பசில் ராஜபக்ஷவின் தூண்டுதலும் ஒரு காரணம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான 21 நீதிமன்ற வழக்குகளில் 20 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. தயாசிறி ஜயசேகர தொடர்பான ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், பொதுச்செயலாளராகத் தானும், தேசிய அமைப்பாளராக சாமர சம்பத்தவும் செயற்பட்டு வருகிறோம்.

கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே கட்சியின் அனைத்துச் சிக்கல்களுக்கும் பிரதான காரணமாவார்.

விஜயதாச ராஜபக்ஷவை தலைவராக்கியதும், 52 நாள் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர அனுமதித்தது போன்ற தவறான தீர்மானங்களை மைத்திரிபால சிறிசேன எடுத்தார். பசில் ராஜபக்ஷவின் தூண்டுதலாலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியதன் மூலம் சுதந்திரக் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டது. 2015 மற்றும் அதற்கடுத்த காலங்களில் சுதந்திர கட்சியின் அரசியல் தீர்மானங்களில் பசில் ராஜபக்ஷவின் செல்வாக்கு இருந்தது. அப்போது பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியையும் தாண்டிச் செயற்பட்டு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களைப் புறக்கணித்தார்.

அதேபோல், அவரால் இன்று கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறைக்கு செல்ல நேரிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஷவை இணைத்துக்கொண்டது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. இவ்வாறு   இந்த நிலைமைக்குக் காரணமான பசில் ராஜபக்ஷவை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பட வேண்டும்.அரசுச் செய்திகள்

2022 இல் நாடு பொருளாதார ரீதியில் முடங்கியபோது, நாட்டின் நலனைக் கருதியே அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தோம்.

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகித் தற்காலிகமாக வேறு கட்சிகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தின் கீழ் தாய் வீட்டிற்கு திரும்புவார்கள், எதிர்வரும் காலத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் கொள்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும், 70 ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பும் தற்போதைய ஆட்சியாளர்கள், அந்த 70 ஆண்டுகளில் கட்டியெழுப்பப்பட்ட பாடசாலைகள், மருத்துவமனைகள், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் வசதிகளை அனுபவித்துக்கொண்டே இக்கேள்வியைக் கேட்கின்றனர்.

மின்சாரக் கட்டணம் குறைப்பு, எரிபொருளை இறக்குமதி விலையிலேயே வழங்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஜே.வி.பி.யின் கடந்த கால கசப்பான வரலாற்றை மறைப்பதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை முன்நிறுத்தி திசைகாட்டி எனும் ஐசிங் (icing) பூசப்பட்ட கேக் போன்று அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது. அத்துடன், உகாண்டாவிலிருந்து திருடப்பட்ட பணத்தை இரண்டு விமானங்களில் கொண்டுவருவதாக மேடைகளில் பிரச்சாரம் செய்த உகாண்டா குமார போன்ற பொய்கள் தற்போது முற்றாக அம்பலமாகியுள்ளன.

இன்று நாட்டின் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வீதியில் இறங்கிப் போராடி வருவது எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் அல்ல, மாறாக அரசாங்கத்தின் ஏமாற்றத்தையும் பொருளாதாரச் சுமையையும் தாங்க முடியாமலேயே ஆகும்.

இவ்வாறான நிலை தொடர்ந்தால், புதுவருடத்தைக் கொண்டாட முடியாத நிலை ஏற்படுவதுடன், அரசாங்கத்தில் உள்ளவர்கள் வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல் உருவாகும்.