ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள் ஊடுருவப்பட்டுள்ளதாகவும், ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அல்லது வேறு வகையில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் கருத்துகளை அந்த விமான நிறுவனம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026 ஜூன் 29ஆம் திகதி வெளிப்புறத் தரப்பினால் வெளியிடப்பட்ட சைபர் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே அண்மைய செய்திகள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அறிந்துகொண்டவுடன், விமான நிறுவனம் உடனடியாக விசாரணைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், நிறுவனத்தின் உள் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் அல்லது செயல்பாட்டு முறைமைகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல் இடம்பெற்றமை, தகவல் வளங்கள் பாதிக்கப்பட்டமை, தரவுகள் அனுமதியின்றி வெளியே எடுக்கப்பட்டமை அல்லது விமானச் சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டமை ஆகியவை உறுதிப்படுத்தப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் சேவைகள் உள்ளிட்ட நிறுவனத்தின் முறைமைகளும் சேவைகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து இயங்கி வருவதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமானச் செயல்பாடுகளுக்கோ சேவைகளின் தொடர்ச்சிக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், குற்றச்சாட்டுடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து பிட்கொயின், அமெரிக்க டொலர் அல்லது வேறு எந்த வடிவத்திலும் கப்பம் கோரப்படவில்லை என்றும், கப்பம் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
பயணிகள், ஊழியர்கள் மற்றும் வணிகப் பங்காளர்களுக்குத் தொடர்ச்சியான நம்பகமான சேவைகளை வழங்குவதற்காக, தனது தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.