கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் களனி குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து 1 கிலோகிராம் 45 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், 1 கிலோகிராம் 86 கிராம் 'ஹெரோயின்' போதைப்பொருளும், மின் தராசு ஒன்றும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 850,000  ரூபா பணம் மற்றும் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணாவார்.

இன்று வியாழக்கிழமை (22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், களனி குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.