கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கொழும்பு மாநகர மேயர் விராய் கெய்லி பல்தசாரும் தமது சொந்த நிதியிலிருந்து நட்டஈடு வழங்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில்  இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 35 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடிய வடிகால் கட்டமைப்பில் 129 மில்லிமீற்றர் மழை பெய்ததே காரணம் என மேயர் கூறியுள்ளார். ஆனால், கொழும்பில் இதற்கு முன்னர் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 1992 ஜூன் 4ஆம் திகதி 494 மில்லிமீற்றரும், 2010 நவம்பர் 10ஆம் திகதி 440 மில்லிமீற்றரும் மழை பெய்துள்ளன. 2005, 2009ஆம் ஆண்டுகளிலும் பல நாட்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனவே, மழையை மாத்திரம் காரணமாகக் கூற முடியாது.

கொழும்பில் குப்பைகள் அகற்றப்படாமை, வடிகால்கள் துப்புரவு செய்யப்படாமை, கால்வாய்களில் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் மழைநீரை வெளியேற்றும் சில நீரிறைக்கும் இயந்திரங்கள் பல மாதங்களாக இயங்காமை போன்றவையே வெள்ளப்பெருக்குக்கான முக்கிய காரணங்களாகும். இவை தொடர்பில் மாநகர சபை வட்டாரங்களிலிருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

2010ஆம் ஆண்டு கடும் மழையின்போது அப்போதைய நகர அபிவிருத்தி செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ குப்பைக் குவியல்களை அகற்றவும், கால்வாய்களைச் சீரமைக்கவும், சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றவும் நடவடிக்கை எடுத்தார். இதனால் கொழும்பு நகரம் தூய்மையான நகரமாக மாற்றப்பட்டது. ஆனால், தற்போதைய 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தின் கீழ் வடிகால்களையும் குப்பைகளையும் முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரச அதிகாரிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியத்தால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து நட்டஈடு வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத் தீர்ப்புகளிலும் வெளிப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பான வழக்குகளிலும் இத்தகைய பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாட்டைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், கொழும்பு நகரின் தூய்மை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுக்கும் பொறுப்பைக் கொண்ட மேயர் விராய் கெய்லி பல்தசாரும் வெள்ளத்தால் சொத்துக்களை இழந்த மக்களுக்கு தமது சொந்தப் பணத்திலிருந்து நட்டஈடு வழங்க வேண்டும். அவர்களிடம் போதிய நிதி இல்லையெனில், நாட்டின் மிகப்பெரிய நிதியமாகக் கூறப்படும் பெலவத்தை நிதியத்திலிருந்து அதனை வழங்க வேண்டும்.

மழை தெய்வத்துக்கு ஐந்து நாட்களில் 35 மில்லிமீற்றர் மாத்திரமே மழை பெய்யுமாறு தந்தி அனுப்ப முடியாது. அடுத்த மழைக்கு முன்னர் நகரத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கத் தயார்ப்படுத்துவதே மேயரின் பொறுப்பாகும் என்றார்.