நவீன உலகில், குறிப்பாக ஜென்சி மற்றும் ஆல்ஃபா தலைமுறையினர் பழைய பாணியிலான அரசியல் கலாசாரத்தை முற்றாக நிராகரித்து வருகின்றனர். அவர்கள் மாற்றத்தை வேண்டி நிற்கும் தர்க்கரீதியான கேள்விகளை முன்வைக்கும் புதிய சக்திகளாக மாறியுள்ளர் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு நேற்று முன்தினம் (06) நடைபெற்றது அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
இன்று எமது நாடு சந்திக்கும் அரசியல் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. குறிப்பாக, ஜென்சி மற்றும் ஆல்ஃபா தலைமுறையினர் பழைய அரசியல் முறைகளை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.
ஒவ்வொரு அரசியல் முடிவின் பின்னாலும் உள்ள தர்க்கம் என்ன? அதன் நடைமுறைச் சாத்தியங்கள் என்ன? என்பதை அவர்கள் கேள்வி கேட்கின்றனர். இத்தகைய ஒரு சூழலில், பாரம்பரியமான பழைய அரசியல் பாணிகளைப் பயன்படுத்தி எம்மால் மக்களை வெல்ல முடியாது.
நாம் அவர்களுடன் வெளிப்படையான, நேர்மையான மற்றும் தர்க்கரீதியான உரையாடல்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் இந்த அரசியல் பயணம், எந்தவொரு தனிநபரின் தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காகவோ ஆரம்பிக்கப்பட்டதல்ல.
மாறாக, இந்த நாட்டின் வரலாற்றுத் தேவையையும், மக்களின் உளரீதியான ஏக்கங்களையும் பூர்த்தி செய்யும் நோக்கில் உருவான ஒரு மக்கள் இயக்கமாகும். தனிப்பட்ட நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்படும் பல இயக்கங்கள், காலப்போக்கில் பலவீனமடைந்து அழிந்து போவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எமது இயக்கம் அவ்வாறானதல்ல. இது மண்ணின் மைந்தர்களால், மண்ணின் தேவைக்காக, மண்ணின் குரலாக உருவானது.
இன்றைய உலக அரசியலில் பொருளாதாரமே பிரதான விடயமாக உள்ளது. எனவே, எமது கட்சி, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், எதிர்காலத்தை சுபீட்சமானதாக மாற்றுவதற்கும் தேவையான விஞ்ஞானபூர்வமான பொருளாதார தரிசனத்தைக் கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் வளங்களை, கடல் நீரிலிருந்து வெண்ணெயை எடுக்கும் திறன் கொண்ட பக்குவத்துடன் கையாள்வதற்கான தொலைநோக்குப் பார்வையும் அறிவும் எமது குழுவினரிடம் உள்ளது. வெறும் அரசியல் முழக்கங்களை மட்டும் முன்வைக்காமல், பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே எமது முதன்மை நோக்கம்.
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ என எந்தவொரு பிரிவினராக இருந்தாலும், தத்தமது கலாசார அடையாளங்களையும், மத நம்பிக்கைகளையும் பாதுகாத்துக்கொண்டு, கௌரவமாகவும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே எமது அரசியல் தரிசனமாகும்.
வேற்றுமைகளுக்கு அப்பால், இலங்கை எனும் அடையாளத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 'சர்வஜன அதிகாரம்' என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல் இது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைத் தோளில் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சக்தி.
தற்போது ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் இயக்கங்கள் பற்றிய பேச்சுகள் பரவலாக உள்ளன. அவர்களுடன் நாம் வெளிப்படையான தொடர்புகளைப் பேணுகின்றோம்.
இருப்பினும், மாற்றம் என்பது மேலோட்டமானதாக இருக்கக்கூடாது. அது ஆணிவேர் வரை செல்ல வேண்டும். நீங்கள் அனைவரும், வெறும் கட்சி உறுப்பினர்களாக மட்டுமன்றி, இந்த வரலாற்று மாற்றத்தின் சிற்பிகளாகக் களம் இறங்க வேண்டும். நாம் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து, இந்த நாட்டைச் சுபீட்சமான பாதையில் கொண்டு செல்ல உறுதி பூண வேண்டும் என்றார்.
ஜென்சி மற்றும் ஆல்ஃபா தலைமுறையினர் பழைய அரசியல் கலாசாரத்தை நிராகரிக்கின்றனர்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space