ஐரோப்பா முழுவதும் பரவி வரும் ஜென்சி தலைமுறை (Gen Z) இளைஞர்களின் எதிர்ப்பலைகளின் தொடர்ச்சியாக, ஜேர்மனியில் கல்வித்துறை மேம்பாடு, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சிக்கான எதிர்ப்பு ஆகியவற்றைக் வலியுறுத்தி 34க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை (31) மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஜேர்மனியின் நிதித் தலைநகரான பிராங்போர்ட்டில் இரவில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், குறைந்தபட்சம் இரண்டு வணிகக் கடைகள் சூறையாடப்பட்டதுடன், பல கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கலவரக்காரர்கள் அவசரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மீது மோலோடோவ் காக்டெய்ல் மற்றும் பட்டாசுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்னர். இதனால் பொதுமக்களை நகரின் மையப்பகுதியை விட்டு விலகியிருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

ஹம்பபேர்க்கிலும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீதித் தடைகள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

ஜென்சி பொறுப்பேற்கிறது (Gen Z regelt) என்ற அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப்போராட்டத்தில், சான்சலர் பிரீட்ரிச் மெர்ஸ் தலைமையிலான அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.